மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மதுக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராம்குமார், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு எஸ்.பி.இ. சட்டம் 1976-ன் அடிப்படையில் பணி நியமன கடிதம், விடுப்பு விதிகள், சேவைப்புத்தக பதிவேடு ஆகியவற்றை வழங்க வேண்டும். மாநில அரசு நிர்ணயம் செய்த குறைந்தபட்ச சம்பளத்தை மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி தொகையை முறையாக பிடித்தம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை தொடர்பாக சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.