அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமரி அனந்தன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படியை தமிழக அரசு காலதாமதமின்றி வழங்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். முதல்-அமைச்சர் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கோரிக்கைகளை விளக்கி சங்க செயலாளர் மரியதாஸ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் காமராஜ், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார், நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன், சாலை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன் உள்பட சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா வரவேற்றார். முடிவில் சாலைப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.