பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார ஆய்வாளர் நிலை 1 பதவி உயர்வில் ஏற்படுத்தப்படும் வீண் காலதாமதத்தை தவிர்த்து பதவி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். 2014-க்கு பின் சுமார் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் 7.11.2008 முதல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியத்தில் 5 சதவீதம் தனி ஊதியத்தினை பாதுகாத்திட வேண்டும். பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டினை கட்டாயப்படுத்த கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பொதுசுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் செல்வராஜா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.