கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டத் தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டத் தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்பாஸ்கர், கோவில் மனையில் குடியிருப்போர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரராமன் மற்றும் நாராயணமூர்த்தி, சிங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத்தலைவர் செந்தில்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
தியாகராஜர் கோவில்
இதில் வாடகை முறையை ரத்து செய்து முந்தைய பகுதி குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும். கோவில் இடங்களில் உரிமை கோரும் கிராமநத்தம், இனாம்நத்தம், குடிக்காணி போன்ற இடங்களில் உண்மை நிலையை கண்டறிந்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல் திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு வாசல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாநில செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை தாங்கினார். கண்ணன் முன்னிலை வகித்தார்.
மன்னார்குடி
இதேபோல் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏ வை.சிவபுண்ணியம், மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பார்த்திபன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கை மனுவை ராஜகோபாலசாமி கோவில் நிர்வாகியிடம் கொடுத்தனர்.
முத்துப்பேட்டை
இதேபோல் முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கர், மாவட்ட விவசாய சங்க துணைச்செயலாளர் முருகையன் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார், துணைத்தலைவர் சுப்பையன், பொருளாளர் ராஜப்பா, துணைச்செயலாளர்கள் முருகவேல், அன்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.