தாயகம் திரும்பியோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தாயகம் திரும்பியோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோத்தகிரி,
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் மறுவாழ்வு திட்டங்களுக்காக கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட், ரேஷன் அட்டைகளை திரும்ப தர வேண்டும். தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய மறுவாழ்வு உதவிகள் பெற அரசு ஆணையின்படி புதிய குழு அமைக்க மறுவாழ்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தாயகம் திரும்பியோர் முன்னேற்ற சங்கம், தீரன் தொழிற்சங்க சங்கம், மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில், கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் தம்பிராஜ் தலைமை தாங்கினார். கோத்தகிரி ஒருங்கிணைப்பாளர் சத்தியசிவன், மாவட்ட செயலாளர் மதிவாணன், குன்னூர் வட்ட செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தாயகம் திரும்பிய மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தென் மாநிலங்களில் 30 லட்சம் தாயகம் திரும்பியோர் உள்ளனர். இவர்களுக்கு வீடு கட்ட வழங்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை திரும்ப பெற்று பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர்.
முடிவில் நிர்வாகி பிரபு நன்றி கூறினார்.