பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊட்டி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஒரு மணி நேரம் வெளி நடப்பு மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு, மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் கந்தசாமி, தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:- தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பின் காரணமாக துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதிவு உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் அரசாணையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். முடிவில், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.