சாலை பணியாளர்கள் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர்கள் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி தொடக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் மலர்மன்னன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து காத்திருப்போருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். சாலை பராமரிப்புக்கு காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலை பணியாளராக பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.