ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்து, அவரை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும். வளர்ச்சித்துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின மற்றும் இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்-அப் காணொலி ஆய்வுகள் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.