பெரம்பலூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கட்சி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
ஊரக வளர்ச்சித்துறையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கு 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 9 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவையில்லை என்று துறை அதிகாரிகளை இழிவுபடுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி நடந்த பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குறிப்பிட்ட சிலர் பேசியது அலுவலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
அவமானப்படுத்தும் வகையில்...
இந்தநிலையில், நேற்று முன்தினம் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் ஒட்டு மொத்தமாக ஊரக வளர்ச்சி அலுவலர்களை அவமானப்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சி துறையே தேவையில்லாதது ஒன்று என்று கலெக்டர் முன்னிலையில் பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் கண்டனம் தெரிவித்து இருக்க வேண்டும்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை மட்டும் பேச அனுமதிக்க வேண்டும். சில நபர்கள் தங்களது அரசியல் நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்தும் வகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை பயன்படுத்துவதை அனுமதிக்காமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும். மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, மேற்கண்ட நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் கற்பகத்தை நேரில் சந்தித்து இது தொடர்பான மனுவினை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.