பெற்றோருடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம்


பெற்றோருடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே விபத்து அபாயத்திலுள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றக்கோரி பெற்றோருடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே பள்ளிக்கூடம் அருகில் அபாயத்திலுள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றக்கோரி நேற்று பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களுக்கு விபத்து அபாயம்

எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நற்கலைக்கோட்டை கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் நுழைவு வாயிலை ஒட்டியுள்ள டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பிகள், பள்ளி வளாகத்திற்குள் நடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் மாணவ, மாணவியர் அச்சத்துடன் பள்ளிக்கு ெசன்று வருகின்றனர். அவ்வப்போது பள்ளி வளாகத்தில் நடவு செய்யப்பட்டுள்ள இழுவை கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு சில மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

குறிப்பாக மழைக்காலங்களில் அந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதால் விபத்து அபாயம் மேலும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்றியமைக்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில், அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

ஆர்ப்பாட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று மாணவ, மாணவியருடன் பள்ளி நுழைவு வாயில் முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான், துணை தாசில்தார் ரகுபதி, எட்டயபுரம் வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் பரதன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதில், ஒரு வாரத்தில் பள்ளி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த வாக்குறுதிப்படி டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்காவிட்டால், மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story