தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக அரசு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு செஸ் வரி விதித்ததை ரத்து செய்ய வேண்டும். 2020-21-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அந்த ஆண்டு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்த மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்களுக்கு கால தாமதமின்றி உடனடியாக காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் நடராஜன், மேற்கு மாவட்ட தலைவர் வெள்ளத்துரை பாண்டி, அவைத்தலைவர்கள் வெங்கடசாமி, சாமிய்யா, மாநில துணை தலைவர் நம்பிராஜன், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுப்பாராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.