கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோவில் உரிமை கோரும் இனாம்நிலம், கிராம நத்தம் போன்ற இடங்களில் உண்மை நிலையை உயர்மட்டக்குழு அமைத்து கண்டறிந்து அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும், வாடகை முறையை ரத்து செய்து முந்தைய பகுதி, குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், முந்தைய ஆட்சியில் புகுத்தப்பட்ட சட்டப்பிரிவுகளை ரத்து செய்து 2016 வரை நடைமுறையில் இருந்த அரசாணைகள் தொடர வேண்டும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அளித்த இணைப்பட்டாக்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையில் இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகத்தின் அனைத்து கோவில்கள் முன்பு தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கமும், குடியிருப்போர் நலச்சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் கோலியனூர் புற்றுமாரியம்மன் கோவில் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் பாலாஜி, பொருளாளர் ரமேஷ், துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கத்தினர், கோலியனூர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் பனமலை மதுரா உமையாள்புரம் காந்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் பனமலை தாளகேஸ்வரர் கோவில் முன்பு சங்க தலைவர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்கள் முன்பு கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


Next Story