கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பூங்கொடி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே ஆத்தூர் தாலுகா போடிகாமன்பட்டி கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் முத்தாலம்மன் கோவில் நிலத்தை மீட்டு தரும்படி வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் கார்த்திக் வினோத் தலைமையில் அந்த கட்சியினர் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே மேம்பாலம் முறைப்படி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த மேம்பாலத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி பேனருடன் வந்து மனு
பட்டிவீரன்பட்டியை சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து வீரர் ரமேஷ்பாபு, அவருடைய மாற்றுத்திறனாளி மனைவி ஷர்மிளா உள்பட 3 பேர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் பேனர்களுடன் வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த மனுவில், தேசிய அளவில் தங்கப்பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், என்று கூறப்பட்டு இருந்தது.
ஆதித்தமிழர் கட்சியினர், தொப்பம்பட்டி ஒன்றியம் வேலம்பட்டி கே.வேலூர் பகுதி மக்களுடன் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், வேலம்பட்டி ஊராட்சி கே.வேலூரில் கடந்த 1955-ம் ஆண்டு 10 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசிக்கிறோம். இந்த நிலையில் நாங்கள் வசிக்கும் இடத்தை ஒருவர் தன்னுடைய நிலம் என்று கூறுகிறார். எனவே எங்களுடைய நிலத்தை அளந்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.