ரிஷிவந்தியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
ரிஷிவந்தியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமை இடமாகக் கொண்டு தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும், ரிஷிவந்தியம் கிராமத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ரிஷிவந்தியத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. காசாம்பு பூமாலை, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட அமைப்பு செயலாளர் பப்லு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் மாநில துணை தலைவர் பாண்டியன், சமூக நீதி பேரவை தலைவர் சிவராமன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் முத்துவேல், நாராயணன், மாவட்ட துணை செயலாளர்கள் வாசன், செந்தில், பாலமுருகன், கட்டையன், ராமச்சந்திரன், கராத்தே மணி உள்பட பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.