சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தாலுகா அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
வருகிற 23-ந்தேதி சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தாலுகா அமைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க அலுவலகத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வி.ஜி. சிட்டிபாபு தலைமை தாங்கினார். வளையமாதேவி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், வீரமுடையாநத்தம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வம், விவசாய சங்க துணை செயலாளர் குபேந்திரன், வையாபுரி, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். இதில் சேத்தியாத்தோப்பு நகர அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மகாராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ஆர். மணிகண்டன், வி.சி.க.வை சேர்ந்த பேரூராட்சி வார்டு உறுப்பினர் பழனி, பா.ம.க. நகர செயலாளர் கலைமணி, விடுதலை சிறுத்தை மாநில துணை செயலாளர் சுவேதா கொளஞ்சிநாதன், பாலமுருகன், சங்கர், இளமாறன், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சேத்தியாத்தோப்பில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகம் மூலம் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். தற்போது சார்பதிவாளர் எல்லை மறுசீரமைப்பு என்ற பெயரில் கிராமங்களை வேறு அலுவலகத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கையை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (புதன்கிழமை) சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.