விருத்தாசலத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருத்தாசலம்,
வேப்பூர் தாலுகா இலங்கியனூர் ஊராட்சியில் 350-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கலெக்டர், சப்-கலெக்டர் என்று அனைத்து துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளித்து வந்தனர். ஆனால் இது வரையிலும் இவர்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய குடியரசு கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய கவுன்சிலர் குமாரி கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தர்ராஜன், துணைத் தலைவர் தவமணி, செந்தில்குமார், மகேந்திரன், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்திய குடியரசு கட்சி மாநில இணை பொதுச்செயலாளர் மங்காபிள்ளை, கதிர்வேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் திராவிட மணி, பரமசிவம், ஆதி அறக்கட்டளை நிர்வாகி திருமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன், இளவரசன், பகுஜன் சமாஜ் கட்சி அய்யாசாமி உள்பட பலர் கலந்து கெர்ணடு பேசினர்.
இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.