ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தலித் கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது
தலித் கிறிஸ்தவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்கக்கோரி மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமை தாங்கினார். மறைவட்ட தலைவர் ஜோசப் வரவேற்று பேசினார். இதில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாநில துணை செயலாளர் எருக்கூர் தாஸ், தேசிய தலித் கிறிஸ்தவர்கள் கண்காணிப்பக தலைவர் சேகர், இருதய சபை அருட்சகோதரர் பங்கிராஸ் மற்றும் வக்கீல் தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தலித் கிறிஸ்தவர், இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஆணையை நீக்கம் செய்ய வேண்டும். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைப்படி தலித் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை, ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்கக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மறைவட்ட பொருளாளர் பீட்டர்தாஸ் மற்றும் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அந்தந்த ஆலயங்களின் பங்குத்தந்தைகள், கிறிஸ்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.