ஊராட்சி மன்ற தலைவர்-வார்டு உறுப்பினரை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


ஊராட்சி மன்ற தலைவர்-வார்டு உறுப்பினரை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் ஊராட்சி மன்ற தலைவர்-வார்டு உறுப்பினரை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் காவிரி நாடன் தலைமை தாங்கினார். அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராம ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி, 8-வது வார்டு உறுப்பினர் முருகேசன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்த சாவித்திரியின் கணவர் பெருமாள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர கண்காணிப்பு குழு அமைத்து முறைப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தீண்டாமையுடன் சாதி ஒழிப்பையும் சட்டமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story