வேங்கைவயல் கிராம சம்பவத்தை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்
வேங்கைவயல் கிராம சம்பவத்தை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சமூக விரோதிகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட வேங்கைவயல் கிராம மக்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு சார்பு உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தார். கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் பிரபு, இணை பொதுச்செயலாளர் மங்காபிள்ளை, மாநில பொருளாளர் கவுரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் கூறுகையில், "வேங்கைவயல் கிராம பிரச்சினையை ஐக்கியநாடுகள் சபை வரை கொண்டு செல்வோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி நடக்கும்போது அரசு தட்டிக்கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.