அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சுப்பிரமணியன் வரவேற்றார். அன்பழகன், சாமு, முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சி.ஏ.பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகள், விசாரணை அலுவலர்களின் துறை ரீதியான விசாரணைகளை தாமதமின்றி அரசு நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடித்திடல் வேண்டும். தமிழக அரசின் வழி காட்டுதலுக்கேற்ப, ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். மாவட்டத் தலைவர் ராசு, செயலாளர் ஞானசேகரன், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் கே.எம்.நேரு, மாவட்ட செயலாளர் பிரேம்குமார், காசி, கேசவன் உள்பட மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சாம்ராஜ் நன்றி கூறினார்.