கிறிஸ்தவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தலித் கிறிஸ்தவர் மற்றும் மதம் மாறிய இஸ்லாமியர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி வேலூரில் கிறிஸ்தவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிறிஸ்தவ மக்கள் களம்
கிறிஸ்தவ மக்கள் களம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பத்தியாவரம் ஏ.அன்புதாஸ் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் உமா எப்சிபா, வேலூர் மண்டல மகளிர் ஒருங்கிணைப்பாளர் மோனிகா பிரான்சிஸ், திருப்பத்தூர் மாவட்டம் லூர்துநாயகம், செங்கல்பட்டு மாவட்டம் பவுலோஸ் நாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ், வேலூர் மாவட்ட செயலாளர் தமிழரசன் ஆகியோர் வரவேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் சி.எஸ்.ஐ. வேலூர் பேராயத்தை சேர்ந்த ஐசக்கதிர்வேலு, இந்திய குடியரசு கட்சி (சிவராஜ் பிரிவு) மாநில பொதுச்செயலாளர் என்ஜினீயர் கே.பி.ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஜி.பிலிப், அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற கழக நிறுவனர் சக்கரவர்த்தி, இந்திய ஒற்றுமை இயக்க தேசிய செயற்குழு உறுப்பினர் இனாமுல்ஹசன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜலாலுதீன், வேட்டவலம் லயோலா கல்லூரி மரியநாதன், துரும்பர் விடுதலை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்வளன், அமைப்பாளர் அல்போன்சா, விடுதலை சிறுத்தைகள் கட்சி கிறிஸ்தவ சமூக நீதி பேரவை வேலூர் மாவட்ட அமைப்பாளர் அல்போன்ஸ் ஆகியோர் பேசினர்.
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்
தலித் கிறிஸ்தவர் மற்றும் மதம் மாறிய இஸ்லாமியர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். நீதிபதி ரங்கநாத்மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆணையத்தை திரும்பப்பெற வேண்டும்.
தமிழக அரசு கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய உள் ஒதுக்கீட்டை எல்லா நிலைகளிலும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பெரும்பான்மை தலித் கிறிஸ்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலை சிற்றுண்டி திட்டத்தினை அரசு உதவி பெறும் அனைத்து கிறிஸ்தவ பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை கிறிஸ்தவ மக்கள் களம் மாநில ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் நிறைவு செய்து வைத்து பேசினார். முடிவில் எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு மறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா வசீகரன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் டிசல்வா ஜோசப், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.