கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழர் தேசம் கட்சி, வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடமதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தொகுதி அவைத்தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். தொகுதி அமைப்பாளர் சுந்தர், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் பூமி அம்பலம் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் வைரவேல், தமிழர் தேசம் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகிடேஸ்வரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழர் தேசம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஸ்ரீராமபுரத்தில் அரசு ஆரம்பப்பள்ளி அமைக்க வேண்டும், காடையனூரில் அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், அ.கோம்பையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய், தமிழர் தேசம் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி அம்பலம், மாநில துணை செயலாளர் அரவிந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.