துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
அரியலூர் அண்ணா சிலை அருகே ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிப்புரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு கடந்த 22.11.2017 அன்று தமிழக அரசு நிர்ணியித்த அடிப்படை சம்பளம், அகவிலைப்படி ஊதியத்தை வழங்க வேண்டும். அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு பி.எப்., சி.பி.எஸ். ஆகியவை வட்டியுடன் இருப்பு கணக்கு, சீருடைக்கான தையல் கூலியை வழங்கிட வேண்டும். இலவச மனையுடன் குடியிருப்புகளை கட்டிக்கொடுக்க வேண்டும். என்.எம்.ஆர். காலத்தை நிரந்தர சேவைக் காலமாக உத்தரவிட வேண்டும். ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அரியர்ஸ் தொகையை வழங்கிட வேண்டும். ஆட்சியர் உத்தரவிட்ட தினக்கூலி ரூ.307-ஐ அமுல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளன மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன் பங்கேற்று பேசினார். மாவட்ட தலைவர் ஆர்.தனசிங், விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமானூர் ஒன்றியச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.