கவர்னரை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், பழனியில் கவர்னரை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கவர்னரை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு உருவபடம் எரிப்பு போராட்டம் நடத்த போவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று காலை ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் உருவ படம் எரிப்பு போராட்டத்தை கைவிடும்படி நிர்வாகிகளிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் ரவணா தலைமை தாங்கினார். இதில் மாநில பிரசார பிரிவு துணை செயலாளர் துரை சம்பத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், நகர தலைவர் சுப்பிரமணி, நகர அமைப்பாளர் பாலா மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக தமிழ்நாட்டை, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று கூறியதற்காக கவர்னரை கண்டித்தும், கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், திராவிட விடுதலை கழகம் சார்பில், பழனி பஸ் நிலையம் வேல் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிட விடுதலை கழக நிர்வாகி மருதமுத்து தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக கவர்னரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.