மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உள்பட 2,500 பேர் மீது வழக்கு
மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உள்பட 2,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் உள்பட 2,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து பழங்காநத்தம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய போது, "எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தமிழக அரசுக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவோம்" என்று கூறியதாக கூறப்படுகிறது.
2,500 பேர் மீது வழக்கு
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்பிரமணியபுரம் போலீசாரிடம் சம்மட்டிபுரம் தி.மு.க. பகுதி கழக செயலாளர் தவமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இதற்கிடையே மேற்கண்ட ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்றும், எனவே ஆர்ப்பாட்டம் நடத்த மறுதினமே முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா உள்ளிட்ட 2500 பேர் மீது அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்துவிட்டோம் என போலீசார் தற்போது தெரிவித்தனர்.