முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? அமைச்சர் கண்டனம்
முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவதா? என கவர்னருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, 'வெளிநாடு செல்வதால் மட்டும் முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள்' என சமீபத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து மறைமுகமாக பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறி வருகிறார். ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசி உள்ளார்.
அரசியலுக்காக பயன்படுத்தி உள்ளார்
தமிழகத்தில் கல்வி சூழ்நிலை சரியில்லை என்பதை போன்றும், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது போன்றும், தொழில் முதலீடு என்பது ஒரு நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதன் மூலம் வந்து விடாது என்றும் பேசி உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை சுட்டிக்காட்டி கவர்னர் பேசி உள்ளார். துணைவேந்தர்கள் மாநாட்டை முழுக்க முழுக்க அரசியலுக்காக கவர்னர் பயன்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே சில பிரச்சினைகளில் கவர்னர் தெரிவித்த கருத்துகள் அவருக்கு எதிராகவே இருப்பதால் அதனை திசை திருப்புவதற்காகவே கவர்னர் இவ்வாறு செயல்படுகிறார் என்று சந்தேகப்படுகிறேன்.
உண்மையை மறைத்து பேசுகிறார்
மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் இந்தியாவில் உள்ள 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளவைதான். சிறந்த கல்லூரிகளை பொறுத்தமட்டில் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 30 கல்லூரிகள் தர வரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
தமிழகத்தில் கல்வி சூழ்நிலை கட்டமைப்பு நன்றாக இருக்கின்ற காரணத்தால்தான் தரவரிசை பட்டியலில் தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய கவர்னர் எப்படி இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு பேசுகிறார். கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதை கவர்னர் அறியவில்லையோ அல்லது அறிந்தும் அறியாதது போன்று பேசுகிறாரா? என தெரியவில்லை.
கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது
வெளிநாடுகளுக்கு சென்று வந்தால் முதலீடுகள் வந்து விடுமா? என்ற ஒரு கேள்வியை கவர்னர் எழுப்பி உள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 108 நிறுவனங்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டு 1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம். தமிழ்நாடு பொருளாதார ரீதியில் முன்னிலையில் இருக்கும் மாநிலம் என நிதி ஆயோக் கூறி இருக்கிறது.
இப்படி இருக்கும்போது தமிழ்நாட்டில் கல்வி சூழல் சரியில்லை, வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என பேசுவதா?. தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றை கவர்னர் அறிந்து கொள்ளாமல் பேசுகிறார்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி கட்டமைப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்தி கவர்னர் பேசியதை ஏற்க முடியாது.
நாட்டின் வளர்ச்சிக்காக பயணம்
இதுபோன்ற பயணங்களை தமிழக முதல்-அமைச்சர் மட்டுமா மேற்கொண்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது, சிங்கப்பூர், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்க்க பயணம் மேற்கொண்டுள்ளார்.
கவர்னர் தற்போது எழுப்பி உள்ள கேள்வி எங்களை முன்னிறுத்தி பிரதமரை நோக்கி எழுப்பி உள்ளாரோ? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, பா.ஜ.க.வினர்தான் இதுகுறித்து கவர்னரிடம் கேட்க வேண்டும்.
எங்களை பொறுத்தமட்டில் நாட்டின் வளர்ச்சிக்காக தொழில் முதலீட்டுக்காக இத்தகைய பயணங்களை மேற்கொள்கிறோம். அப்படி பயணங்களை மேற்கொண்டதன் விளைவு என்ன என்பதைதான் நாம் பார்க்க வேண்டும்.
உண்மைக்கு மாறான கருத்துகள்
முதல்-அமைச்சரின் ஜப்பான், சிங்கப்பூர் பயணத்தின் மூலம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளன. உலகளாவிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.
தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் திகழுகிறது. உகந்த சூழல் காரணமாக தமிழகத்தை நோக்கி உலக முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள். கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் உயர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கவர்னர் அரசியல் ரீதியான கருத்துகளை கூறுவது அரசியலில் ஈடுபடுவதற்கான சூழல் இருந்தால் கவர்னர் மாளிகையை அவர் பயன்படுத்தி கொள்ளக்கூடாது. கவர்னர் ஏற்கனவே கூறி உள்ள கருத்துகளை திசை திருப்புவதற்காக உண்மைக்கு மாறான கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார்.
தேவைப்பட்டால் போராட்டம்
துணைவேந்தர்களிடம் கல்வி சூழ்நிலை பற்றி பேசலாம். கல்வி தொடர்பாக பேசலாம். அதையெல்லாம் விடுத்து விட்டு மறைமுகமாக அரசியல் பேசுவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் உள்நோக்கங்களுக்காக இத்தகைய நடவடிக்கைகளில் கவர்னர் ஈடுபடுகிறார் என்பதுதான் எங்களது கருத்து. கவர்னரின் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து தேவைப்பட்டால் தி.மு.க. போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.