பழங்குடியின மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம்


பழங்குடியின மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பழங்குடியின மாணவர்களுக்கு பல் மருத்துவ முகாம் நடந்தது.

நீலகிரி

கூடலூர்,

இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் கூடலூர், பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஸ்ரீ மதுரை மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சிகளில் கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் இலவச பல் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. நேற்று சோலாடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் பல் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் பல் மருத்துவர்கள் கவிதா, ஐஸ்வர்யா, கீர்த்தி, ரெமோரியோ, முருகானந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பற்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினர். நெலாக்கோட்டை, கஞ்சிக்கொல்லி, வடவயல், குங்கூர் மூலா, சோலாடி ஆகிய இடங்களில் பல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதுவரை 450-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து 6 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்களை சாப்பிடுவதால் பற்கள் எளிதில் கெட்டு விடுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story