பல்லடம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
பஸ் வசதி செய்து தரக்கோரி பல்லடம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பஸ் வசதி செய்து தரக்கோரி பல்லடம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து கரடிவாவி அரசு பள்ளிக்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். இவர்கள் பள்ளி செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பெற்றோர்களின் வாகனங்களிலும், அந்த வழியே செல்லும் சரக்கு வாகனங்களிலும், பல மாணவ, மாணவிகள் நடந்தும் பள்ளிக்கு செல்கிறார்கள்.
எனவே பஸ் வசதி வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று புளியம்பட்டி- பல்லடம் சாலையில் மறியல் செய்ய முடிவு செய்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் உத்தமராஜ், காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியல் வேண்டாம், பல்லடம் அரசு போக்குவரத்து அலுவலகம் சென்று முறையிடலாம் எனக் கூறியதை எடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
மனு
இதையடுத்து பல்லடம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசிய கிளை மேலாளர், தினமும் காலை, மாலை இருவேளைகளில் அரசு பஸ் புளியம்பட்டி வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக பணிமனை அதிகாரியிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.