போலி சாதிச்சான்றிதழ் தாக்கல் செய்த ஊராட்சி தலைவரின் காசோலை அதிகாரம் பறிப்பு


போலி சாதிச்சான்றிதழ் தாக்கல் செய்த ஊராட்சி தலைவரின் காசோலை அதிகாரம் பறிப்பு
x
தினத்தந்தி 30 May 2023 2:30 AM IST (Updated: 30 May 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

போலியான சாதிச்சான்றிதழ் தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டதால் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

தேனி

போலியான சாதிச்சான்றிதழ் தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டதால் ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

போலியான சாதிச்சான்றிதழ்

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக மகேஸ்வரி உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது அந்த ஊராட்சி ஆதிதிராவிடர் (பெண்) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த தேர்தலில் மகேஸ்வரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில், மகேஸ்வரி தேர்தலில் போலியான சாதிச்சான்றிதழ் தாக்கல் செய்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாவட்ட கலெக்டருக்கும் இதுதொடர்பாக புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன. அதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த நபர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

காசோலை அதிகாரம் பறிப்பு

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. நடத்திய விசாரணையில், மகேஸ்வரி தாக்கல் செய்த சாதிச்சான்றிதழ் போலியாக பெறப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்த சாதிச்சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து மேல் நடவடிக்கையாக, ஊராட்சி மன்ற தலைவரின் காசோலையில் கையொப்பம் இடும் அதிகாரத்தை (செக் பவர்) தற்காலிகமாக நிறுத்தி வைத்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். மேலும், ஊராட்சி நிர்வாக பணிகள் முடங்காமல் நடைபெறும் வகையில், வங்கி பரிவர்த்தனைகளில் முதல் நபராக கையொப்பமிடுவதற்கு பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கிராம ஊராட்சி) தற்காலிகமாக அதிகாரம் அளித்தும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story