அதிமுக தொண்டர்களின் உரிமையை பறிக்கும் செயல் நடைபெற்றிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
அதிமுகவில் அடிமட்ட தொண்டர்கள் தலைமை பொறுப்பிற்கு வரும் வாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகரன் தலைமையில் சுமார் 200 பேர் முன்னாள் முதல்-மந்திரி ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, அதிமுகவில் அடிமட்ட தொண்டன் கூட தலைமை பொறுப்பிற்கு வரக்கூடிய வாய்ப்பை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதனை தற்போது உள்ளவர்கள் மாற்றிவிட்டார்கள். இது அதிமுக தொண்டர்களின் உரிமையை பறிக்கும் செயலாக நடைபெற்றிருக்கிறது.
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான். இதனை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவர்கள்(எடப்பாடி தரப்பு) நடத்திய பொதுக்குழுவில் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற பதவியை ரத்து செய்துவிட்டனர். இதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற தர்மயுத்தத்தில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.