துணை கலெக்டர் மர்மச்சாவு


துணை கலெக்டர் மர்மச்சாவு
x

திருப்பத்தூர் மாவட்ட துணை கலெக்டர் மோகனகுமரன் நிர்வாணமாக, படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட துணை கலெக்டர் மோகனகுமரன் நிர்வாணமாக, படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

துணை கலெக்டர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராகவும், கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் பணிபுரிந்தவர் பி.மோகனகுமரன் (வயது 53). சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, கடமைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த 1½ ஆண்டுகளாக திருப்பத்தூரில் பணிபுரிந்து வருகிறார்.

திருப்பத்தூர் பிரான்லைன் பகுதியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரேணு என்பவரது வீட்டின் மாடியில் தனியாக குடியிருந்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை கலெக்டர் தலைமையில நடைபெற்ற கூட்டத்தில் மோகனகுமரன் கலந்து கொண்டுவிட்டு, இரவு டிபன் வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு சென்று உள்ளார்.

துர்நாற்றம்

நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு அவர் வரவில்லை. விடுமுறை குறித்தும் எந்த தகவலும் இல்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவர் போனை எடுக்கவில்லை. மாலைவரை இதே நிலை நீடித்தது. பல்வேறு கோப்புகளில் கையெழுத்து போட வேண்டி இருந்ததால் கலெக்டர் அலுவலக ஊழியர்களை அவரது வீட்டுக்கு அனுப்பி பார்த்த போது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருந்தது.

கதவை தட்டியும், செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோதும் எந்தவித பதிலும் இல்லை. மேலும் வீட்டில் துர்நாற்றம் வீசியது. இதநால் சந்தேகம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் உடனடியாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக டவுன் போலீசுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

நிர்வாண நிலையில்

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே கட்டிலில் துணை கலெக்டர் மோகனகுமரன் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து கலெக்டருக்கு தெரியப்படுத்தினர். சம்பவ இடத்திற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் லட்சுமி, உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெய்சூர்யா டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரணம் என்ன?

இதுகுறித்து போலீசார் கூறுகையில் துணை கலெக்டர் மோகன குமரன், வீட்டில் தனியாக வசித்து வருகிறார். குளிப்பதற்காக இரவில் ஹீட்டர் போட்டுவிட்டு உடைகளை களைந்து உள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடத்த பிறகே அவருடைய சாவுக்கான முழு விவரம் தெரிய வரும் எனவும் தெரிவித்தனர்.

இறந்த மோகனகுமரனுக்கு சாந்தி என்ற மனைவியும், கவின் (12) என்ற மகனும் உள்ளனர். துணை கலெக்டர் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை எடுத்து உள்ளது.


Next Story