சேலத்தில் லஞ்ச வழக்கில் கைதான சார்பதிவாளர் பணி இடைநீக்கம்


சேலத்தில் லஞ்ச வழக்கில் கைதான சார்பதிவாளர் பணி இடைநீக்கம்
x

சேலத்தில் லஞ்ச வழக்கில் கைதான சார்பதிவாளரை பணி இடைநீக்கம் செய்து பத்திரப்பதிவு சேலம் மண்டல துணைத்தலைவர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம்

லஞ்சம்

சேலம் அருகே தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல். இவர் தாயார் பெயரில் உள்ள 17 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்வதற்கு முடிவு செய்தார். இதற்காக அவர் சேலம் உடையாப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கிழக்கு பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

அதைத்தொடர்ந்து சார்பதிவாளர் செல்வபாண்டியன் மற்றும் புரோக்கர் கண்ணன் ஆகியோர் அந்த நிலத்தை நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து பழனிவேலை, புரோக்கர் கண்ணன் தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று பேரம் பேசினார். ஆனால் பணம் கொடுக்க விரும்பாத பழனிவேல் இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

சார்பதிவாளர் கைது

அதன்பேரில் போலீசார் பழனிவேலிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்து அதை சார்பதிவாளரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் சார்பதிவாளர் செல்வபாண்டியனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் செல்வபாண்டியன், புரோக்கர் கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இதனிடையே செல்வபாண்டியனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பணி இடைநீக்கம்

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பெறப்பட்ட அறிக்கையை பதிவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் லஞ்ச வழக்கில் கைதான செல்வபாண்டியனை பணி இடைநீக்கம் செய்து பத்திர பதிவுத்துறை சேலம் மண்டல துணைத்தலைவர் பிரபாகர் உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story