விழுப்புரத்தில் அண்ணா சிலை அவமதிப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
விழுப்புரத்தில் அறிஞர் அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் காலணி மாலை அணிவித்து அவமதிப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலை அமைந்துள்ளது. இந்த சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும் ஆ. ராசாவின் உருவப்படத்திற்கு செம்புள்ளி கரும்புள்ளி வைத்து அவரது உருவப்படத்துடன் அண்ணா சிலை மீது மாட்டி விட்டு அண்ணாவின் தலை பகுதியில் திமுக கட்சிக் கொடியைக் கொண்டு மூடிவிட்டுச் சென்றுள்ளனர்.
அதிகாலையில் அண்ணா சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து இருப்பதைக் கண்ட அப்பகுதியினர் கண்டமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அண்ணா சிலை மீது இருந்த செருப்பு மாலையையும் ஆ. ராசாவின் புகைப்படத்தினை அகற்றினர்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்த தகவல் காட்டுத் தீயாக பரவியதால், திமுகவினர் அங்கு குவிந்தனர். பின்னர் அவமதிக்கப்பட்ட அண்ணாவின் சிலை முன்பு திடீரென திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரறிஞர் அண்ணா சிலையை அவமதித்தவர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கண்டமங்கலம் போலீசார் அண்ணா சிலையை அவமதிக்கும் விதமாகச் செருப்பு மாலை அணிவித்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் புதுச்சேரி செல்லக்கூடிய முக்கிய சாலையான கண்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலையை அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், விழுப்புரம் அருகே அண்ணா சிலை அவமதிப்பு தொடர்பாக சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை அவமதித்திருப்பது கோழைத்தனமான செயல், இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்
அமமுக விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதைத் தொடரவிடக்கூடாது என பதிவிட்டுள்ளார்.