பறவைகள் இடம் பெயர்ந்ததால் வெறிச்சோடிய தேர்த்தங்கல் சரணாலயம்


பறவைகள் இடம் பெயர்ந்ததால் வெறிச்சோடிய    தேர்த்தங்கல் சரணாலயம்
x

தண்ணீர் வற்றியதால் தேர்த்தங்கல் சரணாலயத்தில் இருந்து பறவைகள் இடம் பெயர்ந்ததால் அவை வெறிச்சோடி காணப்படுகிறது.

ராமநாதபுரம்

தண்ணீர் வற்றியதால் தேர்த்தங்கல் சரணாலயத்தில் இருந்து பறவைகள் இடம் பெயர்ந்ததால் அவை வெறிச்சோடி காணப்படுகிறது.

சரணாலயங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், சக்கரக்கோட்டை கண்மாய், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, மேலச்செல்வனூர் ஆகிய 5 ஊர்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன. அதுபோல் இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் பருவமழை சீசன் தொடங்கிய பின்பு டிசம்பர் மாதத்தில் இருந்து ஏராளமான பறவைகள் வரும். இந்த பறவைகள் மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரும்பி செல்லும்.

அது போல் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் செல்லும் சாலையில் உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு கடந்த ஆண்டு பருவமழை சீசன் தொடங்கிய உடனே ஏராளமான பறவைகள் வர தொடங்கின. இந்த ஆண்டு தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்ததாக வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதில் மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, சாம்பல் நிற நாரை, கூழைக்கடா, சாம்பல் நிற கூழைக்கடா, நீர் காகம், வெள்ளை கொக்கு, வாத்துகள் உள்ளிட்ட பல வகையான பறவைகள் வந்து குவிந்திருந்தன.

பறவைகள் திரும்பி சென்றன

இந்த நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் 80 சதவீதம் குறைந்து விட்டது. கொளுத்தும் வெயிலால் நீர்நிலையும் வற்ற தொடங்கி விட்டது. இதனால் பறவைகள் சரணாலயத்தில் கூடுகட்டி வாழ்ந்து வந்த செங்கால் நாரை, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நிற நாரை உள்ளிட்ட அனைத்து பறவைகளும் குஞ்சுகளுடன் திரும்பி சென்று விட்டன.

தற்போது பறவைகள் சரணாலயத்தின் மரக்கிளைகள் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. வெறும் பெயரளவில் கூழைக்கடா, வெள்ளை நிற கொக்கு உள்ளிட்டவை சொற்ப எண்ணிக்கையில் அவ்வப்போது இரை தேட வந்து செல்கின்றன. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க இன்னும் சில மாத காலம் உள்ளதால் அதன் பிறகு மீண்டும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு பறவைகள் வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Next Story