பறவைகள் இன்றி வெறிச்சோடிய சரணாலயங்கள்


பறவைகள் இன்றி வெறிச்சோடிய சரணாலயங்கள்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பருவமழை பொய்த்ததால் மாவட்டத்தில் உள்ள 5 பறவைகள் சரணாலயங்களும் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடியது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

பருவமழை பொய்த்ததால் மாவட்டத்தில் உள்ள 5 பறவைகள் சரணாலயங்களும் பறவைகள் இல்லாமல் வெறிச்சோடியது.

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார் கோவில் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம், முதுகுளத்தூர் தாலுகா பகுதியில் காஞ்சிரங்குளம், சித்திரக்குடி, சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் மற்றும் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் என 5 இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.

ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிய பின்னர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏராளமான பறவைகள் வரும். இவ்வாறு வரும் பறவைகள் ஏப்ரல் அல்லது மே மாதம் திரும்பி செல்லும்.

சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கும் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிய பின்னர் அக்டோபர், நவம்பர் மாதத்தில் இருந்து மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, சாம்பல் நிற நாரை, சாம்பல்நிற கூலைக்கடா, வெள்ளை நிற கூலைக்கடா உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வரும். இவ்வாறு வரும் பறவைகள் சரணாலயத்தின் நீர் நிலையில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து அதன் பின்னர் மீண்டும் ஏப்ரல் அல்லது மே மாதம் குஞ்சுகளுடன் திரும்பி செல்லும்.

வெறிச்சோடியது

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி இரண்டரை மாதங்கள் முடிந்த பின்னரும் மாவட்டத்தில் பருவமழை அதிக அளவு பெய்யவில்லை. பருவமழை பொய்த்து போனதால் மேல செல்வனூர் பறவைகள் சரணாலயமும் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் காட்சியளிக்கின்றது. தண்ணீர் இல்லாததால் பறவைகள் சரணாலயத்திற்கு சீசன் தொடங்கி இரண்டரை மாதங்கள் முடிந்த பின்னரும் இதுவரையிலும் ஒரு பறவைகள் கூட வரவில்லை. இதனால் சரணாலயத்தின் நீர்நிலை வறண்டு போய் காட்சியளிப்பதுடன் அனைத்து மரக்கிளைகளும் பறவைகள் இல்லாமலும் வெறிச்சோடியே காணப்பட்டு வருகின்றன.

பறவைகள் சத்தத்துடன் அழகாக காட்சியளிக்கும் சரணாலயமோ தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால் அந்த கிராம மக்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 5 பறவைகள் சரணாலயங்களிலும் இந்த ஆண்டு தற்போது வரை பறவைகள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு

இதுகுறித்து மேலச்செல்வனூர் ஊராட்சி மன்ற தலைவர் மகரஜோதி கூறுகையில், இந்த சரணாலயம் பகுதியில் ஆஸ்திரேலியா, ரஷ்யா, இலங்கை, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பறவைகள் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இங்குள்ள மரங்களில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து பின்பு தை, மாசி மாதங்களில் குஞ்சுகளுடன் திரும்பி செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலச்செல்வனூர் கண்மாயில் தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பறவைகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இக்கண்மாய்க்கு பார்த்திபனூர் பகுதியில் இருந்து பிரிந்து வரும் வைகை தண்ணீரை கூத்தன் கால்வாய் வழியாக மேலச்செல்வனூருக்கு வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீரை கொண்டு வந்தால் மட்டுமே சரணாலயத்தில் பறவைகள் தங்கும் நிலை ஏற்படும் என்றார்.

மேம்படுத்த வேண்டும்

மேலச்செல்வனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன்:- இந்த சரணாலயத்திற்கு 1300 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் பகுதி அமைந்துள்ளது, இந்த சரணாலயத்தில் அடிப்படை வசதி செய்துதரப்படவில்லை. பார்த்திபனூர், உடைக்குளம் பகுதியில் இருந்து சாம்பகுளம் வரும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் கூத்தன் கால்வாய்க்கு வரும் தண்ணீர் தடைபட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றினால் மேலச்செல்வனூர் கண்மாய்க்கு தண்ணீர் வரும். மேலும் சரணாலயத்திற்கு உட்பட்ட கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதேபோல் சரணாலயத்தில் அடிப்படை கட்டமைப்புகளை அமைத்து, பூங்கா அமைத்து சரணாலயத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story