கழுவன் ஓடை ஏரியை தூர்வார வேண்டும்


கழுவன் ஓடை ஏரியை தூர்வார வேண்டும்
x

சூரப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட கழுவன் ஓடை ஏரியை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கரம்பயம்

சூரப்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட கழுவன் ஓடை ஏரியை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கழுவன் ஓடை

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூரப்பள்ளம் ஊராட்சியில் கழுவன் ஓடை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் உள்ள நீரை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.தற்போது அந்த ஏரியில் செடி-கொடிகளும், காட்டாமணக்கு செடிகளும் வளர்ந்து ஏரியே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக் கிடக்கின்றன. பெரும்பாலான தண்ணீரை அந்த செடிகளே உறிஞ்சி விடுவதால் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

நீர்வழிப்பாதை அடைப்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சூரப்பள்ளம் ஊராட்சிக்கு சொந்தமான இந்த கழுவன் ஓடை ஒரு சிறிய ஏரியாகும். இந்த ஏரியில் ராஜாமடம் வாய்க்காலில் இருந்து தண்ணீர் வருவதற்கு ஒரு பாதை இருந்தது. அந்தப்பாதையில் காட்டாமணக்கு செடிகளும், கருவேலை மரங்களும் வளர்ந்து இருப்பதால் அந்த பாதை முற்றிலுமாக அடைபட்டுள்ளது.சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் தண்ணீரை பட்டுக்கோட்டை, பாளையம், ஆலடிக்குமுளை, மேலத்தெரு, வாவுதோப்பு, சூரப்பள்ளம், பள்ளிவாசல் தெரு, ஆதித்தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

தூர்வாரப்படுமா?

ராஜாமடம் வாய்க்காலில் தண்ணீர் வரும்போது கழுவன் ஓடை ஏரி நிரம்பி போதுமான இருப்பு தாண்டியதும் மீதமுள்ள தண்ணீர் பக்கவாட்டில் உள்ள பாதை வழியாக வெளியேற்றப்பட்டு சூரப்பள்ளம் கிராமத்தில் உள்ள அய்யனார் குளத்தை சென்றடையும். அந்த குளமும் நிரம்பினால் அங்கிருந்து சூரப்பள்ளம் பெரிய ஏரியை சென்றடையும்.ஆனால், தற்போது ஏரிக்கு தண்ணீர் வருவதற்கான பாதையும் இல்லை. வெளியேறுவதற்கும் பாதை இல்லை. இரண்டு பாதைகளுமே செடி-கொடிகளாலும், முட்புதர்களாலும் மறைந்து விட்டன. மேலும், ஏரியிலும் ஆழம் இல்லை.எனவே கழுவன் ஓடை ஏரியை ஆழப்படுத்தி அதன் நீர்வழிப்பாதைகளில் உள்ள செடி-கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதுவே, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story