பாசன வாய்க்கால்-மதகு சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூா் அருகே பொதக்குடியில் பாசன வாய்க்கால்- மதகை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூா் அருகே பொதக்குடியில் பாசன வாய்க்கால்- மதகை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.
பாசன வாய்க்கால்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, பொதக்குடி ரகுமானியா தெரு, அரபாத் தெரு, காயிதேமில்லத் தெரு, முகமது அலி தெரு வழியாக ஆய்குடி பாசன வாய்க்கால் செல்கிறது.வெள்ளையாற்றில் இருந்து வரும் தண்ணீரை இந்த பாசன வாய்க்கால் வழியாக கொண்டு சென்று அப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் நெல், உளுந்து, பயறு, பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இந்த பாசன வாய்க்கால் வழியாக செல்லக்கூடிய தண்ணீரை ஆய்குடி, புதுக்குடி மற்றும் பூதமங்கலம் பகுதியில் உள்ள குளங்களில் நிரப்பி அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்த ஏற்ற வகையில் தேக்கி வைக்கப்படுகிறது.
தூர்வாரவில்லை
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பாசன வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால், குப்பைகள், புதர்கள் மண்டி ஆக்கிரமிப்பில் சிக்கி மேடான பகுதியாக வாய்க்கால் மாறியதுடன், வாய்க்கால் இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வயல்களுக்கு முறையாக பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்வதில்லை. இதனால், 148 ஏக்கரில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன.
பாசன வாய்க்கால் மதகு
ஆற்றில் தண்ணீர் வரும் போது பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் முறையாக கிடைக்காததால், பயிர்களை காப்பாற்ற பம்புசெட் மூலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. மேலும், வெள்ளையாற்றின் முகப்பில் உள்ள பாசன வாய்க்கால் மதகும் சேதமடைந்து உள்ளது. மதகின் சுவர் உடைந்தும், தண்ணீர் திறப்பு பலகை மற்றும் திருகு குழாய் சேதமடைந்து உள்ளது.இதனால், பாசன வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும். சேதமடைந்த பாசன வாய்க்கால் மதகு மற்றும் தண்ணீர் திறப்பு பலகை ஆகியவற்றை புதிதாக அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.