பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே ஓவர்ச்சேரியில் பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே ஓவர்ச்சேரியில் பாசன வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
பாசன வாய்க்கால்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே ஓவர்ச்சேரியில் நடுவாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் உள்ளது. அப்பகுதியில் உள்ள அதிவீரராமன் ஆற்றில் இருந்து, நடுவாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம், அண்டூர், கோவில்பத்து பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் விவசாயிகள் ஆண்டுதோறும் நெல், உளுந்து, பயறு, பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தண்ணீர் செல்ல முடியாத நிலை
கடந்த சில ஆண்டுகளாக இந்த பாசன வாய்க்காலில் குப்பைகள் மற்றும் புதர் செடிகள் சூழ்ந்து ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு காணப்படுகிறது. இதனால், ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் முழுமையான அளவில் பாசன வாய்க்கால் மூலம் செல்வதில்லை என்றும், வாய்க்கால் இடை இடையே தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்பதாகவும், அப்பகுதி விவசாயிகள் கூறுகிறார்கள்.தற்போது பாசன வாய்க்கால் பள்ளமாக இல்லாமல், மேடாகி வருவதாகவும், இதனால், ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் மேடான பாசன வாய்க்காலில் ஏறிச்செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
நடவடிக்கை
இதனால், ஆற்றில் தண்ணீர் வரும் நேரங்களில் கூட பம்பு செட் அமைத்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.