புனரமைக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் அனுப்பி வைப்பு


புனரமைக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் அனுப்பி வைப்பு
x

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புனரமைக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புனரமைக்கப்பட்ட ரெயில் பெட்டிகள் கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது.

பொன்மலை ரெயில்வே பணிமனை

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை ரெயில் பழுது பார்க்கும் பணிமனைகளில் முதன்மையானதாக விளங்கி வருகிறது. ரெயில்களில் பொதுவாக கடைசியில் இணைக்கப்படும் எல்.எச்.பி. பவர் கார்களில் உள்ள டீசல் ஆல்ட்டர்னேட்டர் செட் மூலம் தொடரிலுள்ள அனைத்து பெட்டிகளுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

2020-ம் ஆண்டு வரை எல்.எச்.பி. பவர் கார்களிலுள்ள மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் புனரமைக்கும் பணியை எந்த பணிமனையும் மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் 2020-ம் ஆண்டு இறுதியில் எல்.எச்.பி. பவர்களின் விரிவான மறுசீரமைப்பு பணி பொன்மலை பணிமனைக்கு வழங்கப்பட்டது. முதல் 2 எல்.எச்.பி. பவர் கார்கள் வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து டீசல் பணிமனையானது பழுது பார்க்கும் பணியில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்று 100-வது எல்.எச்.பி. பவர் காரை புனரமைத்ததன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.

சரக்கு ரெயில் பெட்டிகள்

இதேபோல் புதுப்பிக்கப்பட்ட என்.எம்.ஜி. எச்.எஸ். கோச் என்பது ஒரு அதிவேக ஹைபிரிட் கோச் ஆகும். இது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு பொருட்களை நாடு முழுவதும் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பானது நாட்டின் சரக்கு போக்குவரத்துத்துறையின் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

மேலும், ரெயில்வே வாரியம் நாட்டில் உள்ள பல்வேறு ரெயில்வே பணிமனைகளில் பழமையான ஐ.சி.எப். பெட்டிகளை என்.எம்.ஜி.எச்.எஸ் பெட்டிகளாக மாற்றுவதற்கான பெரும் ஆர்டரை வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள மற்ற பணிமனைகளானது இன்னும் கணக்கே தொடங்காத நிலையில், பொன்மலை பணிமனையானது 50-வது என்.எம்.ஜி.எச்.எஸ் பெட்டியை தயாரித்து வெளியில் அனுப்பி வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கொடியசைத்து வழியனுப்பி வைப்பு

பொன்மலை ரெயில்வே பணிமனையில் நேற்று நடந்த விழாவில் புனரமைக்கப்பட்ட 100-வது மற்றும் 101-வது எல்.எச்.பி. பவர் கார்கள், 50-வது என்.எம்.ஜி.எச்.எஸ். பெட்டி மற்றும் டெமு ரெயில் செட்டுகளுக்கான டிரெய்லர் கோச்சுகளை தென்னக ரெயில்வே முதன்மை தலைமை எந்திரவியல் பொறியாளர் கவுதம் தத்தா கொடியசைத்து அனுப்பி வைத்தார். விழாவில் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story