பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் விரக்தி 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் மனவிரக்தி அடைந்த 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெருமந்தூர் வன்னியர் தெருவில் வசித்து வருபவர் டில்லிபாபு (வயது 40). கொத்தனார். இவருக்கு பேபி என்ற மனைவியும், தனுஷ் (15) என்ற ஒரு மகனும், ஸ்ரீலேகா (14) ஒரு மகளும் உள்ளனர். தனுஷ் மற்றும் ஸ்ரீலேகா 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மதுராந்தகம் வில்வநாயகபுரம் அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அங்கு படிக்க விருப்பம் இல்லை என ஸ்ரீலேகா தனது பெற்றோர்களிடம் கூறிவந்ததாக கூறப்படும் நிலையில், அவரது பெற்றோர்கள் ஸ்ரீலேகாவை மட்டும் தனது சொந்த ஊரான பட்டரைபெருமந்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக 9-ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களாக ஸ்ரீலேகா தனது வீட்டில் உள்ளவர்களிடம் தனக்கு பள்ளி பிடிக்கவில்லை எனவும், இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறி வீட்டிலேயே இருந்தார். இதனால் அவரது பெற்றோர் அவரை பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து காலை வழக்கம் போல டில்லிபாபு தன் மனைவி பேபியை அழைத்துக் கொண்டு கொத்தனார் வேலைக்குச் சென்றார். மாணவி ஸ்ரீலேகா மட்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மனவிரக்தியில் இருந்த அவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது தாயின் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெகு நேரமாக அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.