சேப்ளாநத்தத்தில் உறுதி தன்மையை இழந்த மின்கம்பங்கள் விபரீதம் நிகழும் முன் மாற்றப்படுமா?
சேப்ளாநத்தத்தில் உறுதி தன்மையை இழந்த மின்கம்பங்களை விபரீதம் நிகழும் முன் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மந்தாரக்குப்பம்,
மந்தாரக்குப்பம் அருகே சேப்ளாநத்தம் பஸ் நிறுத்தத்தில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் வடக்கு சேப்ளாநத்தம், தெற்கு சேப்ளாநத்தம், உய்யக்கொண்டராவி, கீழ்பாதி, மேல்பாதி, பெரியாக்குறிச்சி, பழைய நெய்வேலி, கங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 கம்பங்களும் அதன் உறுதி தன்மையை இழந்து காணப்படுகிறது. கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ள நிலையில், உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்த நேரத்திலும் 2 கம்பங்களும் உடைந்து மின்மாற்றி கீழே விழும் நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருக்கும் இந்த மின்மாற்றி கீழே விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும். எனவே மின்மாற்றியில் சேதமடைந்த 2 கம்பங்களையும் மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விபரீதம் நிகழும்முன் மாற்ற மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.