9,183 மதுபாட்டில் அழிப்பு
9,183 மதுபாட்டில் அழிப்பு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி முதல் வருகிற 26-ந் தேதி வரை போதை பொருள் ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் மற்றும் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளின் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கடந்த ஓர் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் அழிக்க முடிவு செய்யப்பட்டன. அதன்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜான்சன், உதவி ஆணையாளர் (கலால்) சுகுமார் ஆகியோர் முன்னிலையில் மதுபாட்டில்கள் அனைத்தும் வைக்கப்பட்டன. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் திருப்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் கைப்பற்றப்பட்ட 6 ஆயிரத்து 213 மதுபாட்டில்கள், தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 2 ஆயிரத்து 970 மதுபாட்டில்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 183 மதுபாட்டில்களை தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.