200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
வேதாரண்யம் அருகே 200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே 200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
போலீசாருக்கு தகவல்
நாகை மாவட்டத்தில் சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தலைமையில், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், வேட்டைக்காரனிருப்பு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 200 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அதை தரையில் கொட்டி அழித்தனர்.
ஒருவர் கைது
மேலும் சாராயம் காய்ச்சிய வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த குழந்தைவேலு (வயது55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் தெரிவித்தார்.
திட்டச்சேரி
இதேபோல திருமருகல் அருகே இடையாத்தாங்குடி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து போலீசார் விசாரனை நடத்தினர்.
அதில் அவர் கங்களாஞ்சேரி நாகூர் சாலை சந்தவெளி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த நாகூரான் மகன் சுந்தர் (வயது 27) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருவாரூர் பகுதிக்கு சாராயம் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுந்தரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.