ரூ.5 கோடியில் தேவாங்கு சரணாலயம்
அய்யலூர் வனப்பகுதியில், ரூ.5 கோடியில் தேவாங்கு சரணாலயம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.
தேவாங்கு சரணாலயம்
இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயம், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனப்பகுதியான பூனைக்கரடு என்னுமிடத்தில் அமைக்கப்பட உள்ளது. அங்கு ரூ.5 கோடி மதிப்பில் தேவாங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் 10 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
இதேபோல் அந்த இடத்தில் பொதுமக்களை கவரும் வகையில் பூங்கா, சூழல் சுற்றுலாதலம், தேவாங்கு தொடர்பான குறும்படங்கள் திரையிடுவதற்கான அரங்கு போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
கலெக்டர் ஆய்வு
இதைத்தவிர தேவாங்குகள் விரும்பி உண்ணும் பூச்சிகள் அதிகம் வசிக்கும் சப்பாத்திக்கள்ளி, திருகு கள்ளி போன்ற தாவரங்களை வளர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் அடர் வனப்பகுதியாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பூனைக்கரடு வனப்பகுதியை, கலெக்டர் விசாகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் பிரபு, வேடசந்தூர் தாசில்தார்சக்திவேலன், அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன், அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரி, அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
சரணாலயம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்த அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அரசின் உத்தரவு கிடைத்தவுடன் சரணாலயம் அமைக்கும் பணி தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.