வடமதுரை அருகே வாகனம் மோதி தேவாங்கு பலி; பரிதவித்த 2 குட்டிகள்
வடமதுரை அருகே, சாலையை கடந்தபோது வாகனம் மோதியதில் தேவாங்கு பலியானது. இறந்தது தெரியாமல், தாயிடம் பால் குடித்தபடி 2 குட்டிகள் பரிதவித்த காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.
வடமதுரை அருகே, சாலையை கடந்தபோது வாகனம் மோதியதில் தேவாங்கு பலியானது. இறந்தது தெரியாமல், தாயிடம் பால் குடித்தபடி 2 குட்டிகள் பரிதவித்த காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.
தேவாங்கு
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலூர் வனப்பகுதியில் தேவாங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த விலங்கு, பார்ப்பதற்கு சாதுவாக காணப்படும். இரவு நேரங்களில் மட்டுமே இவற்றை காணமுடியும்.
தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் இப்பகுதியில் தேவாங்குகள் அதிக அளவில் உள்ளதால், அய்யலூரில் தேவாங்கு சரணலாயம் அமைப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்புக்கு வரும் தேவாங்குகள், வாகனத்தில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
வாகனம் மோதி பலி
இந்தநிலையில் அய்யலூரில் இருந்து குருத்தம்பட்டி செல்லும் சாலையில், தண்ணீர்கரடு அருகே நேற்று இரவு பெண் தேவாங்கு ஒன்று தனது 2 குட்டிகளுடன் சாலையை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த தேவாங்கு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தாய் தேவாங்கு படுகாயம் அடைந்தது. ஆனாலும் தனது குட்டிகள் இரண்டையும் அரவணைத்து காயமின்றி உயிர் தப்ப வைத்தது. சிறிது நேரத்தில் தாய் தேவாங்கின் வாயில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கியது.
தான் காயமடைந்தாலும் தனது குட்டிகளை காப்பாற்றிவிட்டோம் என்று தாய் மகிழ்ச்சியடைந்தாலும், அவைகளை பிரிந்து செல்கிறோமே என்ற ஏக்கத்துடன் உயிரை விட்டது.
2 குட்டிகள் பரிதவிப்பு
இதற்கிடையே தாயுடன் ஆனந்தமாக விளையாடிக்கொண்டே சாலையை கடக்க முயன்ற குட்டிகளுக்கு கண நேரத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. தங்களை அரவணைத்து அழைத்து வந்த தாய், அசைவற்று கிடப்பது ஏன் என்று தெரியாமல் 2 குட்டிகளும் தாயை சுற்றி சுற்றி வந்து எழுப்ப முயன்றன.
சிறிது நேரத்தில் அவைகளுக்கு பசியும் ஏற்பட்டது. இதையடுத்து தாயிடம் 2 குட்டிகளும் பால் குடிக்க முயற்சித்து தோற்றன. தினமும் அன்போடு பால் கொடுக்கும் தாய் இன்று ஏன் எழவில்லை என்ற ஏக்கத்துடன் பசியும் குட்டிகளை வாட்டி வதைத்தது. நேரம் செல்லச்செல்ல பசியால் 2 குட்டிகளும் பரிதவித்தன.
தாய் இறந்தது கூட தெரியாமல் 2 குட்டிகளும் பால் குடித்தப்படியே இருந்தன. இந்த காட்சி காண்போரின் கண்களை கண்ணீரால் குளமாக்கும் வகையில் இருந்தது.
வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
இந்த நிலையில் அந்த வழியாக வந்த வேங்கனூரை சேர்ந்த மகுடீஸ்வரன், தேவாங்கு இறந்து கிடப்பதை பார்த்தார். உடனே அவர் தேவாங்கின் உடலையும், அதன் அருகே பரிதவித்துக்கொண்டிருந்த 2 குட்டிகளையும் மீட்டு அய்யலூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இறந்த தேவாங்கின் உடலை, அய்யலூர் அரசு கால்நடை மருத்துவர் சுப்புலட்சுமி நேற்று பிரேத பரிசோதனை செய்தார். அதன்பிறகு தேவாங்கின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
மேலும் மீட்கப்பட்ட 2 தேவாங்கு குட்டிகளும் தானாக இரைதேடி உண்ணும் திறன் பெறும் வரை அய்யலூர் வனச்சரக அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்படும் என்று அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன் தெரிவித்தார்.