வளர்ச்சி திட்ட பணிகள்
நாகை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
நூலகம் கட்டும் பணி
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பின்புறம் பயிற்சி கூடம் மற்றும் திறன் மேம்பாட்டு நூலக கட்டிடம் கட்டும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளருமான அருண்ராய், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பாப்பாகோவில் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடுகள் புனரமைப்பு பணி, விளையாட்டு மைதானம், பூங்கா பெரியார் சிலை, சமுதாயக்கூடம், நூலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், நியாய விலை கடை கட்டிடம், நுழைவு வாயில் பழுது நீக்கம், புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளையும் பார்வையிட்டனர்.
வேளாங்கண்ணி-வேதாரண்யம்
வேளாங்கண்ணி பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளையும், கோவில்பத்து ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் உள்ள பெரப்பான்கன்னி குளம் தூர்வாரும் பணி, மேலக்காடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வாகன நிழலகம் கட்டும் பணி, வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் பண்ணைவெளி குளம் தூர்வாரப்பட்டு கரைகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணி மற்றும் தார்ச்சாலை உள்ள கரைகளில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர்.
வேதாரண்யம் நகராட்சி தோப்புத்துறை மாரியம்மன் கோவில் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஆஸ்பத்திரி சாலை பகுதியில் உள்ள உப்புகுளம் தூர்வாரும் பணி உள்ளிட்ட மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தென்னங்கன்றுகள் வழங்கினர்
முன்னதாக கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சியில் 100 சதவீத மானியத்தில் தென்னகன்றுகளையும், 50 சதவீத மானியத்தில் தூய மல்லி நெல் விதைகளையும் பயனாளிகளுக்கு வழங்கினர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், ஸ்ரீதேவி, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா, வேளாங்கண்ணி பேரூராட்சி செயலர் பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.