வளர்ச்சி திட்ட பணிகள்
திருமருகல் வடக்காலத்தூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
திட்டச்சேரி:
திருமருகல் வடக்காலத்தூர் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.11 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டும் பணியையும், நரிமணம் ஊராட்சியில் ரூ.23 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
தூர்வாரும் பணி
அம்பல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
இதேபோல வடக்காலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படும் கழிவறை கட்டும் பணி, பிள்ளையார் குளம் அருகில் ரூ.4 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெற்களத்தை பார்வையிட்டார்.
சமத்துவ மயானம்
இதை தொடர்ந்து பெரிய தோப்பு பகுதியில் ரூ.5 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமத்துவ மயானம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி திட்டம்) பிருத்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கலைச்செல்வி, திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.