ரூ.2 கோடியே 5 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 5 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குத்தாலம்:
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2 கோடியே 5 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் மாதிரிமங்கலம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.20 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணியையும், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தினையும், திருவாலங்காடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும் கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
தொடர்ந்து தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் செலவில் திருவாலங்காடு முதல் டி.பண்டாரவாடை ரோடு தார் சாலை அமைக்கும் பணியையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் வீடு கட்டும் பணியினையும், திருவாவடுதுறை ஊராட்சியில் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.9.10 லட்சம் செலவில் மேட்டுத்தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, கஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் அர்சிதா பானு சாதிக், கதம்பவள்ளி சின்னையன், துணைத்தலைவர் செல்லக்குட்டி மற்றும் பலர் உடன் இருந்தனர்.