ரூ.2 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
கொள்ளிடம் அருகே ரூ.2 கோடி மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே ரூ.2 கோடி மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
கொள்ளிடம் அருகே உள்ள ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் ரூ.2 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
அதன்படி மேற்கண்ட ஊராட்சியில், கிராம ஊராட்சி செயலகம் கட்டும் பணி, ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணி, அரசு வீடுகள் கட்டும்பணி, ஊராட்சியில் 600 குடும்பங்களுக்கு தனிநபர் உறிஞ்சிகுழி அமைக்கப்பட்டு வரும் பணி, கழிவு நீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி, அங்குள்ள சாவடிக்குளம் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த அனைத்து பணிகளையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அதிகாரிகளிடம், அனைத்து பணிகளையும் தரமாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் ஒன்றிய ஆணையர் அருள்மொழி, பி.டி.ஓ.ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் வனிதா முருகானந்தம் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.