வளர்ச்சி திட்டப்பணிகள் மேலாண்மை இயக்குனர் சங்கர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் ரூ.136 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மேலாண்மை இயக்குனர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 12-வது வார்டு மணக்காட்டில் ஆதிதிராவிட வகுப்பினருக்கு ரூ. 67 கோடியே 86 லட்சத்தில் 636 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை வாரிய மேலாண்மை இயக்குனர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட 44-வது வார்டு காந்தி நகர் பகுதியில் ரூ.28 கோடியே 56 லட்சத்தில் 280 வீடுகளின் மறுகட்டுமான பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 45-வது வார்டு நேரு நகரில் ரூ.39 கோடியே 98 லட்சத்தில் 392 வீடுகள் கட்டும் பணியை ஆய்வு நடத்தினார். இதேபோன்று மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
பங்களிப்பு தொகை
அப்போது அவர் கூறும் போது, சேலம் மாவட்டத்தில் வாரியம் மூலம் ரூ.136 கோடியே 40 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பளவுடன் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றுடன் கூடிய அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானிய தொகையை கழித்து மீதி தொகையை பயனாளிகள் பங்கு தொகையாக செலுத்த வேண்டும். கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் கோவை சரக மேற்பார்வை பொறியாளர் ஜெகன்னாதன், சேலம் கோட்ட நிர்வாக பொறியாளர் விஜயமோகன், உதவி நிர்வாக பொறியாளர் செந்தில்வேல், உதவி பொறியாளர்கள் பாண்டியன் மற்றும் வேல்மோகன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.